×

சி பிரிவில் முதலிடம் பிடித்தது ரஞ்சி காலிறுதியில் தமிழ்நாடு: 7 ஆண்டுக்குப் பிறகு முன்னேறி அசத்தல்

சேலம்: ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்திக் வீழ்த்திய தமிழ்நாடு, எலைட் சி பிரிவில் முதல் இடம் பிடித்ததுடன் 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது.
ஜன.5ம் தேதி தொடங்கிய இந்த தொடரில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் லீக் சுற்று ஆட்டங்கள் நடந்தன (4 நாள் போட்டி). லீக் சுற்றில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின. சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு 7வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. சேலத்தில் நடந்த இப்போட்டியில் பாபா இந்திரஜித் 187 ரன், விஜய் சங்கர் 130 ரன் விளாசியதால் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 435 ரன் குவித்தது. பஞ்சாப் தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட் சாய்த்தார். பஞ்சாப் முதல் இன்னிங்சில் 274 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா ஆட்டமிழக்காமல் 64 ரன், நெஹல் வதேரா 43, அன்மோல் பிரீத்சிங் 41 ரன் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் அஜித்ராம் 6 விக்கெட் அள்ளினார். 161 ரன் முன்னிலை பெற்ற தமிழ்நாடு 2வது இன்னிங்சை தொடங்காமல், பஞ்சாப்பை ஃபாலோ ஆன் செய்யுமாறு பணித்தது. நெஹல் வதேரா அபாரமாக விளையாடி சதம் விளாச, பஞ்சாப் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் சேர்த்தது. கடைசி நாளான நேற்று வதேரா 103 ரன், கேப்டன் மன்தீப் சிங் 14 ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். வதேரா 109 ரன்னில் வெளியேற, மன்தீப் 24 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் இந்திரஜித் வசம் பிடிபட்டார். அன்மோல் 20, சன்விர் சிங் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். பஞ்சாப்பின் 2வது இன்னிங்சில் 231 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 4, அஜித் ராம், பிரதோஷ் ரஞ்சன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு 7 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபாரமாக வென்றது. லோகேஷ்வர் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். நாராயண் ஜெகதீசன் 26, பிரதோஷ் ரஞ்சன் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாபா இந்திரஜித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சி பிரிவில் தமிழ்நாடு 28 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து (4 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா) காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. காலிறுதி ஆட்டங்கள் வரும் 23ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 4 இடங்களில் நடக்கிறது. தமிழ்நாடு அணி காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை கோவை மைதானத்தில் எதிர்கொள்கிறது.

* டி பிரிவின் 7 ஆட்டங்களில் விளையாடிய புதுச்சேரி 2 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 15 புள்ளிகள் பெற்று 6வது இடத்துக்கு தள்ளப்பட்டு காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

The post சி பிரிவில் முதலிடம் பிடித்தது ரஞ்சி காலிறுதியில் தமிழ்நாடு: 7 ஆண்டுக்குப் பிறகு முன்னேறி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ranji ,Salem ,Punjab ,Ranji Trophy League ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...